காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை! (http://www.kamalogam.com/new/showthread.php?t=42509)

nandabalan 10-03-08 01:52 AM

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை!
 
அது ஒரு நிலாக் காலம் என்ற கதை மூலம் ஆனந்த விகடனில் நுழைந்து எல்லோரையும் தன் பக்கம் கவர்ந்த ஸ்டெல்லா புரூஸை ஏன் எல்லோரும் மறந்து போனார்கள்.

அந்த கதையை படித்து பார்த்தால் தெரியும் எத்தனை அருமையான ஒரு காதல் கதை என்று. காதலோடு உண்மையும் கலந்த கதை அது.

தன் மனைவி இறந்த துக்கம் தாளாமல் தூக்கிலிட்டு மறைந்து போனார் இந்த எழுத்தாளர் ராம்மோகன் என்ற ஸ்டெல்லா புரூஸ்.

----------------------------------------------------------------
Notes:குமுதத்தில் வந்த செய்தி இணைத்திருக்கிறேன். By Hayath

----------------------------------------------------------------

எழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை மூலம் தனது வாழ்வை முடித்துக் கொண்டு எழுத்துலகத்துக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறார்.

காதல் மனைவியின் மரணத்தால் எழுந்த கவலை, கூடவே எழுத்தாளர்களுக்கே உரித்தான வறுமை, இரண்டும் கூட்டுச் சேர்ந்துகொண்டு ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கின்றன. ‘நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரண விடுதலை பெறுகிறேன்’ என்ற ரீதியில் வருத்தம் தோய்ந்த வரிகளைப் பதிவு செய்துவிட்டு, கட்டியிருந்த வேஷ்டியின் மூலம், கடந்த முதல் தேதி மரணத்தைத் கட்டித் தழுவிக் கொண்டிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.

கோடம்பாக்கம் டேங்க் ரோட்டில் அவரது வீட்டு மேல்மாடியில் வசிக்கும் கவிதா என்பவரிடம் பேசினோம்.

‘‘அவரது சொந்தப் பெயர் ராம் மோகன். அவர் குடியிருந்த இந்த வீடு ஹேமாவின் அண்ணனுக்குச் சொந்தமான வீடு. அவர் துபாயில் இருப்பதால் ஸ்டெல்லா புரூஸ் மனைவியுடன் இங்கே வாழ்ந்து வந்தார். ஸ்டெல்லாவுக்கும், ஹேமாவுக்கும் கிட்டத்தட்ட பதினாறு வருட வயது வித்தியாசம். குழந்தைகள் இல்லை. இருந்தாலும் இவ்வளவு அன்னியோன்னியமான தம்பதியை யாரும் பார்க்க முடியாது. ஹேமாவின் தங்கை பிரேமாவும் இவர்களோடுதான் இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன் பிரேமா இதய நோயால் இறந்து போனார். ஸ்டெல்லா தேவையில்லாமல் யாருடனும் பேச மாட்டார். ஆனால், ஹேமா நேர்மாறாக எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவார். இ.பி. பில் கட்டுவது, இன்கம்டாக்ஸ் கட்டப் போவது என அனைத்து வேலைகளையும் ஹேமாதான் செய்வார். ஸ்டெல்லாவுக்கு எந்தச் சுமையும் தர மாட்டார். இந்த நிலையில்தான் கடந்த வருடம் ஜூலை மாதம் ஹேமாவுக்கு கிட்னி ஃபெயிலியரானது. துடித்துப் போன ஸ்டெல்லா, மனைவியின் சிகிச்சைக்காக கையில் இருந்த அவ்வளவு பணத்தையும் செலவழித்தார். அப்படியிருந்தும் ஹேமாவைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹேமா இறந்து போய்விட்டார்.

மனைவி இறந்ததை ஸ்டெல்லாவால் நம்பவே முடியவில்லை. திக்பிரமை அடைந்தவர் போல ஆகி விட்டார். தனக்குத்தானே சிறைவாசம் விதித்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து வந்தார். அவருக்கான சமையல் மற்றும் துணி துவைக்கும் வேலைகளை ஒரு வேலைக்காரம்மாள் செய்து வந்தார்.

அதிகாலையில் ஆறு மணிக்கு எழுந்து நாங்கள் செல்வதற்கு வசதியாக கேட்டின் பூட்டைத் திறந்து வைப்பார். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார். பிறகு அவரே டீ போட்டுக்குடித்துவிட்டு, டேபிள் மேல் பேனா, பேப்பரோடு எழுதுவதற்கு உட்கார்ந்துவிடுவார். மனைவியின் மரணம் அவரை ரொம்பவே பாதித்து விட்டது. ‘நான் ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க மாட்டேன். ஹேமாவோட இடத்துக்கு நானும் போயிடுவேன்’ என்று எங்களை எப்போதாவது பார்த்தால் சொல்வார். நாங்கள் அவரை சமாதானப்படுத்துவோம்.

கடந்த முதல் தேதி இரவு வீட்டின் வெளியே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்து விட்டு உள்ளேபோய் விட்டார். மறுநாள் காலையில் வேலைக்காரம்மாள் வந்தபோது கதவு சாத்திக் கிடந்திருக்கிறது. வேலைக்காரம்மாள் குரல் கொடுத்தபோது பதிலே இல்லை. சந்தேகமடைந்த அவர் எங்களிடம் வந்து சொன்னதும். நாங்கள் உள்ளே போய்ப் பார்த்தோம். ஸ்டெல்லா தூக்கு மாட்டி இறந்து போயிருந்தார். உடனே மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவிட்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தோம். வாழ்க்கையில் இவரைப் போல ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது’’ என ரொம்பவே சோகம் தாங்காமல் கூறினார் கவிதா.

நாம் ஸ்டெல்லா புரூஸின் வீட்டுக்குள் போனபோது, அவரது தங்கை தேவிகா ராணி சோகத்தோடு அமர்ந்திருந்தார். “எங்கள் சொந்த ஊர் விருதுநகர். நாங்கள் பணக்காரக் குடும்பம். அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷனில்தான் தங்கியிருந்தார். தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வழியைப் பின்பற்றி எழுத்துலகில் கால் பதித்தார். எங்கள் அப்பா ரத்தினம் இறந்துவிட்டார். அம்மா தமயந்தி சொந்த ஊரில் இருக்கிறார். நான்கு நாளைக்கு முன்புகூட, அம்மாவிடம் அண்ணன் போனில் பேசும்போது, ஹேமாவின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதாக வருத்தப்பட்டார். அம்மாவும், ‘எங்களோடவே வந்து இருப்பா. மனசு வருத்தப்படாதே. நீ நல்லா இருந்தாத்தான் நான் இங்க நல்லா இருக்க முடியும்’ என ஆறுதல் சொன்னார். அதற்குள் இப்படியரு முடிவை எடுத்து விட்டார். மனதுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது’’ என்றார் தேம்பியபடி.

ஸ்டெல்லாவின் நண்பர்களோடு பேசினோம். “ஸ்டெல்லா இறுதிக் காலங்களில் மிகுந்த பணக் கஷ்டத் திற்கு ஆளாகியிருந்தார். யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். எழுத்தும், காதல் மனைவியும்தான் அவரது உலகம். கறுப்புக் கண்ணாடியுடன் கூடிய அவரது கம்பீரத் தோற்றத்தை இனி பார்க்க முடியாது. தகுதி, அந்தஸ்து, ஈகோ எதுவும் இல்லாமல் வாழ்ந்த மனிதர் அவர். புத்தகம் படிப்பது, இலக்கியம் பேசுவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் போவது என பலரும் மனதில் கனவு காணும் வாழ்க் கையை அவர் நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வாழ்க்கை அவருக்கு சூனியமான போதுதான், இப்படியரு மரணத்தைத் தேடிக் கொண்டார்’’ என வேதனைப்பட்டார்கள் அவர்கள்.

ஸ்டெல்லா புரூஸ் கடைசியாக எழுதிய கடித மொன்றை அவரது நண்பர் ஒருவர் நமக்குக் காட்டினார். அதில், ‘எனக்கு வயது 67. இத்தனை வருடங்களில் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்கள் எதுவும் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாகவே வாழ்ந்திருக்கிறேன். என்னை அலாதியான காதலோடு நேசித்து, பத்திரப்படுத்தி வந்த அபூர்வமான மனைவி ஹேமாவோடு வாழ்ந்ததை எத்தனை பிறவியானாலும் மறக்க மாட்டேன். பணக் கஷ்டமும், தனிமையும் மிகப் பெரிய வேதனை. வயதான காலத்திற்குத் தேவையான பணம், வங்கி டெபாசிட்டில் இல்லை. எனது நம்பிக்கையில் நான் உடைந்து போய் விட்டேன். நான் சீக்கிரம் விடுதலை பெறுவேன்!’ என காற்றில் படபடத்தது அந்தக் கடிதம்.

‘ஒருமுறைதான் பூக்கும், அது ஒரு நிலாக்காலம், மீண்டும் அந்த ஞாபகங்கள், வெகுதூரத்தில் மனம்’ _ இவையெல்லாமே ஸ்டெல்லா புரூஸ் எழுதிய நாவலின் தலைப்புகள். அந்தத் தலைப்புகளே அவரைப்பற்றி ஏதோ சொல்வது போல இல்லை?

BILLA 10-03-08 02:18 AM

நெஞ்சை நெருடும் செய்தி இது.

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Sabalam21 10-03-08 08:31 AM

ஸ்டெல்லா புரூஸின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவரின் எழுத்து அருமை என்பது அனைவருக்கும் தெரியும். உடல் நலமில்லாத மனைவியை அவர் கடந்த சில வருடங்களாக பார்த்து கொண்ட பாங்கு, அவரின் பிரிவை தாங்காது செய்து கொண்ட தற்கொலை அவர் காதலின் மீது வைத்திருந்த மரியாதையை உணர வைத்துது. அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

sreeram 10-03-08 08:36 AM

என்ன கொடுமையிது... சென்ற வாரம்தான் சுஜாதாவின் மரணம். இப்பொழுது ஸ்டெல்லா புரூஸ்...? ஸ்டெல்லா புரூஸ் கதை ஆவியில் வந்தது...அப்பொழுது நான் பள்ளியில் படிக்கும் மாணவன். பனங்காட்டு அண்ணாச்சி... என்று ஒரு கதை படித்ததாய் நினைவு... கிராமத்தினை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்...ம்ம்... நல்ல மனிதர்...ஏன் தான் அவருக்கு இப்படி ஒரு முடிவோ....? மனம் கணக்கின்றது...!

milkyboy2006 10-03-08 08:42 AM

செய்தி கேள்விப்பட்டேன்....... படித்தவர்களே இப்படி முடிவுக்கு போவதை நினைக்கும் போது............

RasaRasan 10-03-08 09:00 AM

ஸ்டெல்லா புரூஸின் கதைகள் நிறைய நானும் படித்துள்ளேன். தன் மனைவியின் பிரிவு தாங்காமல் தன்னுயிரையும் இழக்க துணிந்த அவரை கோழை என்பதா அல்லது மனைவியின் பிரிவை தாங்க முடியாத அளவுக்கு மனைவியின் மீது அன்பு கொண்டவருக்கு அன்பின் எடுத்து காட்டாய் விளங்குகிறார் என சொல்வதா!! அவரின் ஆத்மா சாந்தியடைவதாக.

asho 10-03-08 09:22 AM

ஸ்டெல்லா புருஸ் அவர்களின் துனைவியார் சிறுநீரக கோளாறு காரணமாக நவீன கிசிக்சை பெற்று வந்தார்கள். பல ஆண்டுகளாக அவ்வாறே இருந்து மிகுந்த பண இழப்பு மருத்துவத்திற்கு என செலவழித்து கடனாளி ஆகியுள்ளார். எந்நேரமும் மரணம் சம்பவிக்கும் என்ற அச்சத்திலே இருந்து வந்து, சமீபத்தில் அவர் மனைவி இறந்து விட்டார்கள். அதனை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதம் (இனையத்தில் கண்டது)

Quote:

வீட்டில் ஸ்டெல்லா புரூஸ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் எழுதியிருப்பதாவது:

கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக, ஆடம்பர சிந்தனை துளியும் இன்றி வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து, அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும் ஹேமாவும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான இலக்கிய தன்மையான காவியம். என் மரணம், முதுமையில் ஒடுங்கிப் போயிருக்கும். ஹேமாவின் துணை இல்லாத சூனியம், தாங்க முடியாததாக இருக்கிறது. தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.

எனவே, ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது, மரண விடுதலை பெறுகிறேன்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஆதி 10-03-08 10:54 AM

ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

smartman 10-03-08 10:55 AM

ஸ்டெல்லா புரூஸ் கடந்த 01-03-2008 அன்று தன்னுடைய சென்னை கோடம்பாக்கம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு வயது 67.

நான் மிகவும் விரும்பும் மற்றொரு எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ். மிக மென்மையான உணர்வுகளை அழகாகக் கோர்த்து கதையில் கொடுப்பவர். சில கதைகளே கொடுத்திருக்கிறார் என்றாலும் உள்ளத்தை ஊடுறுவி நிற்கும்படி இருக்கும் இவரது எழுத்துக்கள். உண்மையிலே மென்மை உள்ளம் கொண்டவராகவும், காதல் மிகவும் அதிகம் உணர்பவராகவும் இருப்பவராக இருந்திருக்கிறார். எனவே தான் இப்படி ஒரு முடிவை தேர்ந்தெடுத்தாரோ?

மனம் நடுங்குகிறது. ஏன் இப்படி துயரங்கள் அடுத்தடுத்து?

Hayath 10-03-08 11:24 AM

என் கல்லூரி காலங்களில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன், தனிப்பட்ட முறையில் அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு.

அவரின் கடைசி கடிதம் மனதை உருக்குவதாக உள்ளது ஆனால் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும், அவரின் தற்கொலை முடிவை என் மனது ஒத்துக் கொள்ளவில்லை.யாரும், யாரையும் நம்பி இல்லை எனவே அவர் போராடி வாழ்ந்திருக்க வேண்டும், இன்னும் பல நூல்கள் எழுதி இருக்க வேண்டும்,அதில் தனிமை எவ்வளவு கொடுமை , மனைவியை பிரிந்து நான் எப்படியெல்லாம் போராடி வாழ்ந்து வருகிறேன், தன் காதல் மனைவியின் நினைவுகளே தனக்கு துணையாக உள்ளது என்றெல்லாம் தனது புத்தகத்தில் எழுதியிருக்கலாம், அது இதுப்போல வாழும் பலருக்கு உதவியாக இருந்திருக்கும்.

மனைவியை இழந்தவர்கள் மற்றும் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இறந்தபிறகு வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களைத்தான் நாம் தியாகி , நெஞ்சுறுதி கொண்டவர் எனலாம், தனக்கு பிடித்த ஒருவரை இழந்து விட்டால் தானும் இறந்து விட வேண்டும் என அனைவரும் நினைத்து விட்டால் என்னாவது ? பாதி மக்கள் தொகை அல்லவா குறைந்திருக்கும்.

ஒருவரின் மரணம் (சுஜாதா மரணம்) அவருக்கு புகழைத் தேடி தருவதாக இருக்க வேண்டும் மாறாக இழுக்கை தேடி தரக்கூடாது.


All times are GMT +5.5. The time now is 04:41 AM.

Powered by Kamalogam members